நட்சத்திர தாரை பலன்

அதிஷ்டம் தரும் நட்சத்திரங்கள்
அதிஷ்டம் தரும் நட்சத்திரங்கள்


 தாரை பலன்கள்

ஜோதிட சாஸ்திரம் என்பது மிகப்பெரிய கடல் போன்றது. நம் முன்னோர்கள் ஒரு மனிதன் பிறக்கின்ற பொழுது, அவன் பிறந்த நாள், நட்சத்திரம், தேதி, கிழமை, அயணம், கரணம் போன்ற பல ஜோதிட ரீதியிலான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிக்கின்றனர். பொதுவாக ஒரு ஜாதகத்தில் 12 ராசிகளில் நவகிரகங்களும் அடங்குகின்றன. அதேபோன்று அந்த நவகிரகங்களுக்குள்ளாக 27 நட்சத்திரங்களும் அடங்குகின்றன.

பொதுவாக ஜாதகத்தை கணிக்கும் பொழுது அனைவரும் ராசி, லக்னம், நட்சத்திரம் போன்றவற்றை மட்டுமே கணித்து பலன் கூறுகின்றனர். ஆனால் நட்சத்திரங்களை பற்றி குறிப்பிடும் பொழுது “தாரை” எனப்படும் நட்சத்திரங்களுக்கான பலன் குறித்து பெரும்பாலானோர் கூறாமல் விட்டு விடுகின்றனர். இங்கு நாம் இந்த தாரை என்றால் என்ன? இந்த தாரை ஒரு நபருக்கு என்னென்ன செய்யும்? என்பது குறித்தும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தாரை” என்றால் தருவது என பொருள். அதாவது 27 நட்சத்திரங்களில் எந்த ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய சாதக, பாதக பலன்களை கொடுக்கக் கூடியது இந்த தாரை ஆகும். அந்த வகையில் ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு ஜென்மதாரை, சம்பத்து தாரை, விபத்து தாரை, ஷேம தாரை, பிரத்தியோகத்தாரை, சாதகத்தாரை, வதைதாரை, மைத்ர தாரை, அதிமைத்ர தாரை என 9 வகையான தாரைகள் ஏற்படுகின்றன. இந்த தாரைகள் ஒவ்வொன்றிற்கும் என்னென்ன பலன்கள் (Tharai palangal) என்பதையும், எந்த தாரையில் என்ன செய்தால் உயர்வை பெறலாம்? எந்த தாரையில் எதை செய்யக்கூடாது போன்றவற்றையும், பார்ப்போம் வாருங்கள்.

ஜென்ம தாரை

முதலாவதாக வருவது ஜென்ம தாரை என்பதாகும். ஜென்ம தாரை என்பது ஒருவர் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தார் என வைத்துக் கொள்வோம். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான் ஆவார். 27 நட்சத்திரங்களில் அஸ்வினி நட்சத்திரத்திற்கு 10 வது நட்சத்திரமாக வருவது மகம் நட்சத்திரமாகும்.

அதேபோன்று அஸ்வினி நட்சத்திரத்திற்கு 19 வது நட்சத்திரமாக வருவது மூலம் நட்சத்திரமாகும். இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் அதிபதி கேது பகவான் ஆவார். இந்த மூன்று நட்சத்திரங்களும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு ஜென்ம தாரை நட்சத்திர தினங்களாகும். இதேபோன்று மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 10, 19 ஆவது நட்சத்திரங்கள் எது என கணக்கிட்டால், தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஜென்மதாரை நட்சத்திர தினங்கள் வரும்.

நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய காலெண்டரில் பார்த்தல் ஒவ்வொரு நாளும் எந்த நட்சத்திரியம் நடக்கிறது என்ற தகவல் இருக்கும். அந்த வகையில் உங்கள் நட்சத்திரத்திற்கான ஜென்மத்தாரை நடக்கின்ற தினங்களில் ஆண்களாக இருப்பின் முடி திருத்தம், சவரம் போன்றவற்றை செய்யக்கூடாது. கணவன் – மனைவி தாம்பத்ய உறவு மேற்கொள்ளக்கூடாது. திருமணம் புதுமனை புகுவிழா நடத்துதல் போன்ற சுப காரியங்கள் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. புலால் உண்ணக்கூடாது. போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. புதிய மனை, வாகனம் வாங்குதல் கூடாது.



சம்பத்து தாரை

இரண்டாவதாக வருவது “சம்பத்து தாரை” என்பதாகும் உங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு 2, 11, 20 வதாக வருகின்ற நட்சத்திரங்கள் “சம்பத்து தாரை” நட்சத்திரங்கள் எனப்படும். உதாரணமாக நீங்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் என வைத்துக் கொள்வோம். கார்த்திகைக்கு இரண்டாவதாக வருகின்ற நட்சத்திரம் “ரோகிணி” நட்சத்திரம், பதினொன்றாவதாக வருகின்ற நட்சத்திரம் “அஸ்தம்” நட்சத்திரம். 20 வது ஆக வருகின்ற நட்சத்திரம் “திருவோணம்” நட்சத்திரம்.

ஆக இந்த மூன்று நட்சத்திரங்களும் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சம்பத்து தாரை நட்சத்திரங்கள் ஆகும். இந்த சம்பத்து தாரை நட்சத்திர தினத்தன்று புதிய நிலம் வாங்குதல், தங்க ஆபரணங்கள் வாங்குதல், புதிய நகை செய்தல், சுப காரியங்கள் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களை செய்யலாம்.


விபத்து தாரை

மூன்றாவதாக வருவது “விபத்து தாரை” என்பதாகும். உதாரணமாக நீங்கள் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என வைத்துக் கொள்வோம். அவிட்டம் நட்சத்திரத்திற்கு 3 வது நட்சத்திரமாக பூரட்டாதி நட்சத்திரமும், 12 வது நட்சத்திரமாக புனர்பூசம் நட்சத்திரமும், 21 வது நட்சத்திரமாக விசாக நட்சத்திரமும் வருகின்றன.

இந்த மூன்று நட்சத்திரங்களும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விபத்து தாரை நட்சத்திரங்களாகும். எனவே இந்த விபத்து தாரை நட்சத்திர தினத்தன்று புதிய வாகனங்கள் வாங்குவது, இரவு நேர வாகன பயணம், அதிவேகமாக வாகனங்கள் இயக்குதல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயல்கள் போன்றவற்றை செய்யக்கூடாது.

ஷேம தாரை

நான்காவதாக வருவது “ஷேம தாரை” எனப்படும். இந்த ஷேம தாரை என்பது உங்கள் நட்சத்திரத்திற்கு 4,13, 22 ஆவது நட்சத்திரமாக வரக்கூடிய நட்சத்திரங்களாகும். உதாரணத்திற்கு நீங்கள் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தால் உங்கள் நச்சத்திரத்திற்கு நான்காவதாக வருகின்ற சித்திரை நட்சத்திரம், 13 வது ஆக வருகின்ற அவிட்ட நட்சத்திரம், 22 ஆவது ஆக வருகின்ற கார்த்திகை நட்சத்திரம் ஆகியவை உங்கள் நட்சத்திரத்திற்கு ஷேம நட்சத்திரங்கள் ஆகும். இந்த ஷேம நட்சத்திர தினத்தன்று நீங்கள் வாங்கிய கடன் பாக்கிகளை திரும்ப செலுத்தலாம். நீண்ட நாள் நோய் நொடியில் அவதியுறுபவர்கள் இந்த நட்சத்திரங்களில் மருந்து உண்ணலாம்.

எனினும் இந்த ஷேம நட்சத்திர தினங்களில் 4 ஆவது மற்றும் 13 வதாக வருகின்ற நட்சத்திரங்களை தவிர்த்து 22 ஆவதாக வருகின்ற ஷேம நட்சத்திர தினத்தில் மேற்சொன்ன காரியங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும் என ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இந்த 22 ஆவது ஆக வருகின்ற ஷேம தாரை நட்சத்திரம் என்பது “அவிநாசிக நட்சத்திரம்” என்கிற அடிப்படையில் இந்த 22 ஆவது வருகின்ற ஷேம தாரை நட்சத்திரத்தில் செய்கின்ற காரியங்கள் பாதகமான பலன்களையே தரும் என கூறுகின்றனர்.

பிரத்தியோகத் தாரை

ஐந்தாவதாக வருகின்ற நட்சத்திரத்தாரை “பிரத்தியோகத் தாரை” எனப்படும். நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 5, 14, 23 ஆகிய எண்ணிக்கையில் வருகின்ற நட்சத்திரங்களே, உங்கள் நட்சத்திரத்திற்கு பிரத்தியோகதாரை நட்சத்திர தினங்களாகும். இந்த பிரத்தியோகத்தாரை நட்சத்திர தினத்தன்று முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகக் கூடாது. தெரியாத இடங்களுக்கு செல்லக்கூடாது. அதை மீறி சென்றால் செய்யாத குற்றங்களுக்கு நீங்கள் பழியற்கும் நிலை ஏற்படும். இந்த பிரத்தியோகத்தாரை தினங்களில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சென்றால் தேவையற்ற சண்டைகளை தவிர்க்கலாம்.

சாதகத் தாரை

ஆறாவதாக வருகின்ற நட்சத்திரத்தாரை “சாதகத்தாரை” எனப்படும். நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 6 ஆவது, 15 ஆவது மற்றும் 24 ஆவதாக வருகின்ற நட்சத்திரங்கள், சாதகத்தாரை நட்சத்திரங்கள் ஆகும். இந்த சாதகத்தாரை தினத்தன்று நீங்கள் மனதில் விரும்பிய எந்த ஒரு நற்காரியங்களையும் துணிந்து செய்யலாம். திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். ஜோதிட ரீதியான பரிகாரங்களை செய்யலாம். அரசாங்க ரீதியான காரியங்களில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேற்சொன்ன செயல்கள் அனைத்தும் இந்த சாதகத்தாரை தினத்தன்று செய்வதால் உறுதியான பலன்களை கொடுக்கும்.


வதைத் தாரை

ஏழாவதாக வருகின்ற நட்சத்திரத்தாரை வதைத்தாரை எனப்படும். நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 7, 16, 25 ஆவது வருகின்ற நட்சத்திரங்கள், உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு வதை தாரை நட்சத்திரங்களாகும். இந்த வதைத்தாரை தினத்தன்று பிறருடன் வீண் வம்புகளில் ஈடுபடக்கூடாது. திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. கருவுற்றிருக்கும் பெண்களாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களை இயக்கம் பொழுது மிகவும் எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும்.


மைத்ர தாரை

எட்டாவதாக வருகின்ற நட்சத்திரத்தாரை “மைத்ர தாரை” எனப்படும். இந்த மைத்திர தாரை என்பது நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 8, 17, 26 ஆவது வருகின்ற நட்சத்திரங்களே மைத்ர தாரை நட்சத்திரங்களாகும். பொதுவாக எந்த ஒரு நட்சத்திரத்திற்கும் இந்த மைத்திர தாரை நட்சத்திர தினம் தான் “சந்திராஷ்டமம்” தினமாகவும் அமைகிறது.

பொதுவாக இந்த மைத்ரத் தாரை நட்சத்திரம் தினம் என்பது சுப தினமாக கருதப்பட்டாலும் பலரும் இந்த தினத்தில் சுப காரியங்கள் மேற்கொள்வதில்லை. எனினும் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்கள், இரண்டாவதாக திருமணம் செய்வதாக இருப்பின், இந்த மைத்ர தாரை நட்சத்திர தினங்களில் செய்வது, அவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் என ஜோதிட அறிஞர்கள் கூறுகின்றனர்.

அதிமைத்ர தாரை

ஒன்பதாவதாக வருகின்ற தாரை “அதிமைத்ர தாரை” என்பதாகும். இந்த அதிமைத்ர தாரை என்பது நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 9,18,27 ஏழாவதாக வருகின்ற நட்சத்திரங்களே அதிமைத்ர தாரை நட்சத்திரங்கள் ஆகும். அதிமைத்ர தாரை நட்சத்திர தினங்களில் வெளியூர், வெளிநாடு பயணம் செய்யலாம். திருமணத்திற்கான நகை, புடவைகள் வாங்கலாம். தொழில், வியாபார ரீதியான முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆன்மீகத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம். இந்த தாரை தினத்தன்று மேற்சொன்ன செயல்களை செய்வதால் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

Comments